அர்மேனிய நாட்டில் பாரம்பரியமிக்க தண்ணீர் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களும் கலந்துகொண்டு ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அர்மேனிய நாட்டில் தண்ணீர் கடவுளாக, மக்கள் நம்பும் ‘ஆஸ்டிக்’ என்ற பெண் தெய்வத்திடம், வேண்டுகின்ற பிராத்தனை நிறைவேற்றுவதற்காக ரோஜாக்களை அளிப்பது வழக்கம். அந்தப் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் தண்ணீர் திருவிழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில், உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களும் ஆர்வமாக கலந்துகொண்டனர். வாளி மற்றும் கப்புடன் வீதியில் திரண்ட மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடினர். இதுபோன்ற திருவிழாக்கள் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் என்பதில் அர்மேனிய மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த தண்ணீர் திருவிழா மக்களை குளிர்வித்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளையாடி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.