மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய காந்தங்களால் இயக்கப்படும் பறக்கும் கார்கள் சீனாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக, பறக்கும் ஆட்டோமொபைல்கள் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே உள்ளன. இந்த இயலாமையைக் கடந்து, உண்மையில் ஒன்றை உருவாக்க அறிவியல் ரீதியாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் ஒருகட்டமாக சீனாவில் பறக்கும் கார்கள் குறித்த சோதனை ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உள்ள தென்மேற்கு ஜியாடோங் பல்கலைக்கழகத்தின் சீன ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம் காந்தங்களைப் பயன்படுத்தி கண்டக்டர் ரெயிலுக்கு மேலே 35 மில்லிமீட்டர் உயரத்தில் மிதக்கும் மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் கார்களுக்கான சோதனை ஒன்றை நடத்தினர்.
சோதனை செய்யப்பட்ட இந்த கார் காந்த லெவிடேஷன் (மேக்லெவ்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் எட்டு வாகனங்களை வலிமையான காந்தங்களுடன் வாகனத்தின் அடிப்பகுதியில் வைத்து 8 கிமீ நீளமுள்ள தண்டவாளத்தில் அவற்றை சோதனை செய்தனர். ஆச்சரியம் என்னவென்றால், எட்டு கார்களில் ஒன்று மணிக்கு 230 கிமீ வேகத்தை எட்டி பயணித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் மேம்பாட்டில் பணியாற்றிய பல்கலைக்கழகப் பேராசிரியரான டெங் ஜிகாங், பயணிகள் கார்களுக்கு காந்த லெவிடேஷனைப் பின்பற்றுவது குறைந்த ஆற்றல் நுகர்வு மற்றும் அதிக தூரம் பயணத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
1980 களில் இருந்து, சில வணிக ரயில்கள் காந்த லெவிடேஷன் அல்லது "மேக்லெவ்" ஐப் பயன்படுத்துகின்றன. இது மின்மயமாக்கப்பட்ட காந்தப்புலத்தைப் பயன்படுத்தி பொருட்களை அதிக வேகத்தில் செலுத்த அல்லது இழுக்க பயன்படுத்துகிறது. இன்று, தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பானில் மாக்லெவ் ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோவில், மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மாக்லேவ் புல்லட் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியது. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார்களையும் பறக்கும் கார்களாக்கும் ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.