அமெரிக்காவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் 6 வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள Newport News நகரத்தில் உள்ளது ரிச்நெக் தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் வெள்ளிக்கிழமையன்று வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இதில் 30 வயதான அவனது ஆசிரியர் படுகாயமடைந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்தாலும், அவரது உடல்நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்புக்காக வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்காக உள்ளான்.
இதுகுறித்து காவல்துறையின் தலைவர் ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், " 6 வயது மாணவர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தற்போது எங்களது கஸ்டடியில் அந்த மாணவர் உள்ளார். இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவனுக்கு எங்கிருந்து துப்பாக்கி கிடைத்தது என்பதை முதலில் அறிய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
வெர்ஜினியா மாகாண பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்கர் பேசும்போது, "நான் மிகுந்த அதிர்ச்சியிலும், மனவேதனையிலும் இருக்கிறேன். இளைஞர்கள் கைகளில் துப்பாக்கி கிடைக்காததை நமது சமூகம் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், அனைத்து பள்ளி வளாகங்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன, ஆனால் வெள்ளிக்கிழமை ரிச்நெக் துவக்கப் பள்ளியில் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நியூயார்க்கில் கடை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கொலை, விபத்து, தற்காப்புக்காக நடந்தவை. மீதி பாதி உயிரிழப்புகள் தற்கொலை சம்பவங்கள் என துப்பாக்கி வன்முறை காப்பக தரவுத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.