ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்தவர் ரஷ்ய தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின். இவர் பயணித்த ஜெட் விமானமானது நேற்று விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர் உட்பட இவ்விபத்தில் 10 பேர் பலியானதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விபத்துக்கு ரஷ்ய வான்வெளி பாதுகாப்பு படை காரணமாக இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
62 வயதான யெவ்ஜெனி ப்ரிகோஜின் பயணித்த ப்ரிகோஜின் Embraer-135 (EBM-135BJ) என்ற விமானம் நேற்று (புதன்கிழமை) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சென்று கொண்டிருந்த பொழுது, மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் பகுதியில் விபத்துக்கு உள்ளானதாக ரஷ்யாவின் ரோசாவியட்சியா என்ற விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய இவர்களது உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இது குறித்து அங்குள்ள ஊடகங்களுக்குப் பேசிய உள்ளூர் வாசிகள், விபத்து நடப்பதற்கு முன்பாக இடி விழுவது போல சத்தங்கள் கேட்டதாகவும், விமானம் தரையில் மோதி தீப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனராம்.
கிரே சோன் என்ற சேனல், "ரஷ்ய துரோகிகளின் செயல்களின் விளைவாக பிரிகோஜின் இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான இரண்டாவது வணிக ஜெட் விமானம் மாஸ்கோ பிராந்தியத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளது.
வாக்னர் குழுத் தலைவராக இருந்தவர் யெவ்ஜெனி பிரிகோஸின். இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்டது.
உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, யெவ்ஜெனி பிரிகோஸின் உலக நாடுகளின் கவனத்தை பெற்றார். ஒருகட்டத்தில் இவர் ரஷ்ய அரசுக்கு எதிராக மாஸ்கோ கூலிப்படையை இணைத்துக்கொண்டு உள்நாட்டுப் போரைத் தொடங்கியதாகக் கூறப்பட்டது
ரஷ்ய அரசை அச்சுறுத்தி வந்த பிரிகோஸின், கடந்த 1961ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு, கொள்ளை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பிரிகோஸினுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து விடுதலையான அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் அப்போது நகரின் துணை மேயராக இருந்த புதினின் (தற்போதைய ரஷ்ய அதிபர்) அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். மேலும் புதினின் நட்பு வட்டத்தால் சமையல் வணிகத்தில் அவர், ரஷ்ய அரசாங்க ஒப்பந்தங்களை அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், ’புதினின் சமையல்காரர்’ என்றும் செல்லமாகவும் அழைக்கப்பட்டு வந்தார் அவர்.