குளத்தில் தவறி விழுந்த குட்டியானை தத்தளித்து கொண்டிருக்கும்போது, அதன் தாய் யானை மற்றொரு யானையுடன் இணைந்து சமயோசிதமாக செயல்பட்டு குட்டி யானையை மீட்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
குழந்தைதான் பெற்றோரின் மிகப்பெரிய செல்வம்., பொக்கிஷம். அது மனிதனாக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும் இந்த கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டால், பெற்றோர்கள் தங்கள் குழந்தையைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவ்வாறு குளத்தில் தவறி விழுந்த குட்டியானை தத்தளித்து கொண்டிருக்கும்போது, அதன் தாய் யானை மற்றொரு யானையுடன் இணைந்து சமயோசிதமாக செயல்பட்டு குட்டி யானையை மீட்கும் வீடியோக் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Gabriele Corno என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு தாய் யானையும் ஒரு குட்டி யானையும் குளத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதில் இருந்து வீடியோ துவங்குகிறது. திடீரென குட்டி யானை குளத்தில் தவறி விழுந்து தத்தளிக்க துவங்கியது. தாய் யானை தனது குட்டியை காப்பாற்ற வழி தெரியாமல் தவிக்கும் வேளையில், மற்றொரு யானை இந்த காட்சிகளைப் பார்த்து குளத்திற்கு ஓடி வருகிறது.
குட்டி யானை தனது தும்பிக்கையை தண்ணீருக்கு மேல் வைத்திருக்க முயலும் போது, இரண்டு யானைகளும் இணைந்து குளத்திற்குள் இறங்குகின்றன. இரு யானைகளும் குட்டியை ஆழமற்ற திசை நோக்கி வேகமாக நகர்த்தி குட்டியை மீட்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தென் கொரியாவில் உள்ள சியோல் பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.