அமெரிக்காவில் கருப்பின இளைஞர் சுடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் துப்பாக்கி கலவரமாக மாறியது. துப்பாக்கி ஏந்திய சிறுவன் சுட்டதில், இருவர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்துள்ளார்.
விஸ்கான்ஸின் மாகாணத்தின் கெனோஷா நகரில் கடந்த ஞாயிறு அன்று கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதைக் கண்டித்து காவல்துறைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தின் போது, துப்பாக்கிகளுடன் பலர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அப்போது துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே போராட்டம் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.