திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஒரு சிறுவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், ஒருவித அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவில், சிறுவன் ஒருவன் திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான்.
அப்போது அந்த சிறுவனின் உதட்டில் தலாய் லாமா முத்தம் கொடுக்கிறார். பின் தன்னுடைய நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி தலாய்லாமா சொல்கிறார். இந்த காட்சி அப்படியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ள அவலமும் நடந்துள்ளது.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, தலாய் லாமாவுக்கு கடும் கண்டனங்கள் குவியத்தொடங்கின. ‘யாருமே செய்யக்கூடாத இப்படியொரு செயலை, ஒரு ஆன்மீக தலைவர் செய்வது கண்டிக்கத்தக்கது’ என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தலாய் லாமா செய்தது அத்துமீறல் என பலரும் காட்டமாக கருத்து தெரிவித்தனர்.
ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டில், தலாய் லாமா தனது வாரிசு ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றால், அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுவனிடம் அத்துமீறிய நிகழ்வும், கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. தொடர் சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் நிலையில், தலாய் லாமா சிறுவனிடம் தான் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவில், “அந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அந்தச் சிறுவனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்விஷயத்தில் குழந்தையிடையே தலாய் லாமா அத்துமீறியதற்காக அவர் எந்தளவுக்கு எதிர்க்கப்பட்டாரோ, அதேயளவுக்கு அச்சம்பவத்தை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்து சிரித்த அங்கிருந்த மக்களும் அவர்களின் மனநிலையும் பலராலும் எதிர்க்கப்பட்டது. அந்தவகையில் இச்சம்பவத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது.
நம் வீட்டு குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும்; குட் டச், பேட் டச் விஷயங்களில் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய தெளிவு என்ன; இவ்விஷயத்தில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பவை.
இவை குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா நம்மிடையே பேசினார்.
“குழந்தைகளுக்கு நாம் என்னதான் குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அதில் குழப்பம் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர்களிடம் நாம், நேரடியாக சொல்லவேண்டிய ஒரேவிஷயம் ‘உனக்கு அந்நியமான யாரும் உன் உடலை தொட அனுமதிக்கக்கூடாது’ என்பது மட்டுமே. இத்துடன், ‘உன்னை (குழந்தையை) சங்கடப்படுத்தும் வகையில் எந்த விஷயமும் யாரும் செய்தால், அதை எதிர்த்து நில் - நான் உன்னோடு துணையிருப்பேன்’ என்று அவர்களுக்கு நாம் நம்பிக்கை தர வேண்டும்.
இதெல்லாம் நாணயத்தின் ஒருபக்கம்தான். இன்னொருபக்கம், முழுக்க முழுக்க நாம் தான் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். நம் வீட்டு குழந்தை மட்டுமல்ல, அடுத்த வீட்டு குழந்தையென்றாலும் பொது இடத்தில் இதுபோன்ற நேரத்தில் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இச்சம்பவத்தில் நடப்பதுபோன்ற எங்கு நடந்தாலும், அதை நாம் தான் முதலில் எதிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் கன்னத்தில், நெற்றியில் முத்தமிட்டால் கூட, அவர்களிடம் அனுமதி வாங்கித்தான் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், பெரியவர்களாகிய நமக்கு வரவேண்டும்.
குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
நாம் எந்த நோக்கத்தில் அவர்களுக்கு முத்தமிடுகிறோம், தொடுகிறோம் என்பதை விட, அது அவர்களுக்கு எப்படி தெரிகிறது என்பதே முக்கியம். இது ஏதோ ஒரு நாட்டில், எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் என்று கடந்துவிடாமல், பொறுப்புடன் இதை கையாள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும்தான். ஆக, இவ்விஷயத்தில், மாற வேண்டியது நாம் ஒவ்வொருவரும்தான். நம்மிடமிருந்தே அதை தொடங்குவோம்!” என்றார்.