உலகின் அதிவேக ஓட்டக்காரரான தடகள வீரர் உசைன் போல்ட்டின் கணக்கில் இருந்து 12.7 மில்லியன் டாலர் அதாவது 103 கோடி ரூபாய் கணக்கிலான தொகையை காணவில்லை எனக் குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் மியூட்சுவல் ஃபண்டில் பணம் போடுவதால் சாமானிய மக்கள் என்ன மாதிரியான இன்னல்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள் என்பது குறித்து பேசப்பட்டிருக்கும்.
படத்தில் வரும் மோசடிகளை போல உண்மையிலேயே சிலருக்கு நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தாலும், பங்கு வர்த்தக முதலீடுகள் குறித்த அடிப்படைகள் மக்களும் தவறாது தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், உலகின் மின்னல் வேக தடகள வீரரான உசைன் போல்ட் தனது வங்கிக் கணக்கில் இருந்த 12.7 மில்லியன் டாலர்கள் காணாமல் போனதை அடுத்து வெறும் 12 ஆயிரம் டாலர்களே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தில் உசைன் போல்ட் தனது பணத்தை முதலீடு செய்திருந்தார். அதுதான் தற்போது காணாமல் போயிருக்கிறது. இதனையடுத்து தனது வழக்கறிஞரை வைத்து புகார் தெரிவித்ததோடு, தனது பணத்தை திருப்பி தரவும் வலியுறுத்தியிருக்கிறார் போல்ட்.
அதன்படி 10 நாட்களுக்குள் காணாமல் போன தனது 12.7 மில்லியன் டாலர் பணம் திரும்ப கொடுக்கப்படாவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட முதலீடு நிறுவனத்துக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டிருக்கிறார்.
உசைன் போல்ட் கடிதம் அனுப்பிய பிறகு அந்த முதலீட்டு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “முன்னாள் ஊழியர் ஒருவர் செய்த மோசடியால் எங்கள் வாடிக்கையாளர்களின் பல மில்லியன் கணக்கான பணம் காணாமல் போயிருக்கிறது. இதனை இந்த மாத தொடக்கத்தில்தான் கண்டறிந்தோம். இது குறித்த அனைத்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் ஜமைக்காவின் நிதியமைச்சர் நைகல் கிளார்க், “இது மிகவும் அபாயமான நிலைமை. சில நேர்மையற்ற நபர்களின் செயலால் எங்கள் நிதி நிறுவனங்களை சந்தேகிக்க இந்த சம்பவங்கள் தூண்டுகிறது.” எனக் கூறியுள்ளார். இதனிடையே முதலீட்டு நிறுவனத்தில் நடந்த மோசடி குறித்து விசாரிக்க சிறப்பு தணிக்கையாளரை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது ஜமைக்காவின் நிதிச் சேவைகள் ஆணையம்.