பிரபல முன்னாள் ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட், இரவு விடுதியில் போதையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட், வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்காவில் பிறந்தவர். ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் இவர், 100, மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஓலிம்பிக் போட்டிகளில் தங்கம் தட்டி சென்ற ஒரே வீரர்.
இவர் லண்டனில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பர்களுடன் நேற்று சென்றார். அதிகாலை 3 மணியளவில் அங்கு ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தினர். பின்னர் அந்த மதுபான விடுதியின் வெளியே அவரது நண்பர்களுக்கும் வேறு சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு கோஷ்டியும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். உசேன் போல்ட்டும் அவர்களுடன் இணைந்து சிலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
‘சுமார் 30 பேர், இந்த மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். உசேன் போல்டை அவரது நண்பர்கள் சிலர் கையை பிடித்து இழுத்துச் சென்றனர்’ என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் சிலர், ’மோதல் ஏற்பட்டதும் சண்டையை விலக்கத்தான் உசேன் போல்ட் வந்தார்’ என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.