அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் லாட்டரி கடை ஒன்றில் சுரண்டல் லாட்டரியை வாங்கிய பெண் ஒருவர் அதை பாதி மட்டுமே சுரண்டிய நிலையில் கீழே போட்டு சென்றுள்ளார். பத்து நாட்களுக்கு பின்னர் அந்த சீட்டை கடையை சுத்தம் செய்த போது கண்டெடுத்தார் அந்த லாட்டரி கடையின் உரிமையாளர். அந்த கடையை இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் ஒன்று நடத்தி வந்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட அந்த லாட்டரி சீட்டில் அதை வாங்கியவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது. இந்திய மதிப்பில் 7.2 கோடி ரூபாய்.
‘அடிச்சதுடா சாமி’ என எண்ணாமல் அந்த லாட்டரி சீட்டை வாங்கிய தங்கள் கடையின் பெண் வாடிக்கையாளரை தேடிப்பிடித்து கொடுத்துள்ளது அந்த குடும்பம். தற்போது அவர்களது நேர்மைக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் மக்கள்.
“உணவு நேர இடைவேளையின் போது கடையில் வந்து லாட்டரி சீட்டை வாங்கி சுரண்டினேன். பாதி மட்டுமே சுரண்டிய போது அதிலிருந்து எண் நிச்சயம் வெல்லாது என கணித்து பணிக்கு செல்லும் அவசரத்தில் கீழே போட்டுவிட்டேன்” என்கிறார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வென்ற அந்த பெண்.
“அந்த பெண் எங்கள் கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர். சம்பவத்தன்று குப்பைதொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சுரண்டப்படாத லாட்டரியை நான் சுரண்டினேன். அதிலிருந்த லாட்டரி தான் இது. அதில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அடித்திருந்தது. அந்த சீட்டை எனது அம்மா தான் விற்பனை செய்தார். ஒரு நாள் இரவு மட்டும் நான் கோடீஸ்வரனாக இருந்தேன். அதுவே போதும்” என்கிறார் லாட்டரி சீட்டு கடை உரிமையாளரின் மகன் அபி ஷா.