அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பை மூன்றாவது முறையாகக் கொலைசெய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியா மாகாணம் கோசெல்லாவில் ட்ரம்ப் பங்கேற்ற பிரசாரக் கூட்டம், கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குண்டுதுளைக்காத கண்ணாடிக்குப் பின்புறம் நின்று மக்கள் மத்தியில் ட்ரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், பொதுக்கூட்ட நுழைவுவாயிலில் கருப்பு நிற காரில் வந்த 49 வயதுடைய வெம் மில்லர் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், போலி நுழைவுச் சீட்டு உள்ளிட்டவை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புப் படையினர் அவரை கைதுசெய்தனர். பின்னர், அவர் டாலர் 5,000-ம் கட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர், மீண்டும் 2025 ஜனவரி 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
விசாரணையில் அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும், வலதுசாரி அரசாங்கத்தின் எதிர்ப்புக் குழுவினை சார்ந்தவராக இருக்கக் கூடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் பொதுக் கூட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, முதல்முறையாக துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவரது காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவரைக் கொல்ல முயற்சித்தவரை அமெரிக்க ரகசிய காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இரண்டாவது முறையாக, புளோரிடா மாகாணத்தில், தனது கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ட்ரம்பை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில், காயமின்றி ட்ரம்ப் தப்பியது குறிப்பிடத்தக்கது.