சி- செக்‌ஷன் குழந்தைப் பிறப்பால் கை, கால்களை இழந்த பெண்.. - 'செப்டிக் ஷாக்' என்றால் என்ன?

சி- செக்‌ஷன் குழந்தைப் பிறப்பால் கை, கால்களை இழந்த பெண்.. - 'செப்டிக் ஷாக்' என்றால் என்ன?
சி- செக்‌ஷன் குழந்தைப் பிறப்பால் கை, கால்களை இழந்த பெண்.. - 'செப்டிக் ஷாக்' என்றால் என்ன?
Published on

29 வயது பெண் ஒருவருக்கு தவறாகிப்போன சி - செக்‌ஷன் அறுவைசிகிச்சையால் கை, கால்களை இழந்த அதிர்ச்சிச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. செப்சிஸ் என்கிற ’செப்டிக் ஷாக்’ என்றால் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பாச்சேகோ. 29 வயதான கிறிஸ்டினாவிற்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். அடுத்து 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி தனது இரண்டாம் குழந்தையை சி- செக்‌ஷன் அறுவைசிகிச்சை மூலம் பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது காய்ச்சல் வந்திருக்கிறது. அதனை அறுவைசிகிச்சையிலிருந்து குணம்பெற்று வருவதன் அறிகுறிதான் என நினைத்திருக்கிறார் கிறிஸ்டினா. மேலும் அவருக்கு இபுப்ரோஃபென் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார் மருத்துவமனை நர்ஸ்.

ஆனால் வீட்டிற்கு வந்த கிறிஸ்டினாவிற்கு அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து உடல்நல குறைபாடுகள் ஏற்படவே மருத்துவரை அணுகியிருக்கிறார். அங்கு அவரை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த மருத்துவர், மேல்சிகிச்சைக்காக சான் அண்டோனியோவிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு ’செப்டிக் அதிர்ச்சி’ ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்தனர். அதுதான் கிறிஸ்டினாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டதாக கூறுகிறார் அவர்.

இதுகுறித்து ஏபிசி செய்திக்கு பேட்டியளித்த கிறிஸ்டினா, “திடீரென என்னால் மூச்சுவிட முடியவில்லை; பார்க்க முடியவில்லை; நான் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்வதை மட்டும் என்னால் உணரமுடிந்தது. ’மீண்டும் எங்களிடம் வந்துவிடு; உன்னுடைய குழந்தைகளுக்கு நீ வேண்டும். எனக்கு நீ வேண்டும். எனக்கும் குழந்தைகளுக்கும் நீ வேண்டும்’ என்று என் கணவர் என்னிடம் சொன்னதை மட்டும் என்னால் கேட்க முடிந்தது. அதுமட்டும் கடைசியாக கேட்டது நினைவிருக்கிறது” என்கிறார்.

செப்சிஸ் நிலையில் மிக மோசமானது ’செப்டிக் ஷாக்’. அதாவது தொற்றுக்கு உடல் அதீத எதிர்வினையாற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் இறப்புகளில் இதய பிரச்னைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது செப்சிஸ் என்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை மையம்.

கிறிஸ்டினாவின் கணவர் ஜேப்பப் பாச்சேகோ கூறுகையில், ”அறுவைசிகிச்சைக்கு பிறகான செப்சிஸ் நிலையானது அவளுடைய இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த நிலையில், டயாலிசிஸ் செய்யவும், ECMO கருவியும் பொருத்தப்பட்டிருந்தது. தொடர் சிகிச்சையால் நவம்பர் மாத பாதியில் கிறிஸ்டினாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு சுவாசிக்க பொருத்தியிருந்த குழாய்களை மருத்துவர்கள் நீக்கிவிட்டனர். ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு கால்கள் மற்றும் கைகளை நீக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட தொற்றால் நிகழ்ந்தது.

அதனால் இரண்டு கைகளிலும் முழங்கைக்கு கீழேயும், முழங்கால்களுக்குக் கீழேயும் கை, கால்களை அகற்றிவிட்டனர். அதன்பிறகு கிறிஸ்டினாவுக்கு ஒரு டசன் சரும சிகிச்சைகளை மேற்கொள்ளப்பட்டது. பல வாரங்களுக்கு பிறகே நீக்கப்பட்ட கை மற்றும் கால்களை சுற்றியிருந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சருமம் குணமானது” என்கிறார்.

100 நாட்களுக்கும் மேலாக, நீண்ட சிகிச்சைக்குப்பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி கிறிஸ்டினா வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com