கொரோனா நோய்த் தொற்றால் இறந்த ஒருவர், தனது மனைவியைப் பற்றி எழுதி வைத்திருந்த கடைசிக் குறிப்பு ஒன்று படிப்பவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.
உலகம் உழுவதும் கொரோனா நோய்த் தொற்று கடுமையாகப் பரவி வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு இதுவரை 2,848, 102 பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் தீவிரம் உணர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் கோழிகளைப் போல கூடைக்குள் அடைந்து கிடக்கிறார்கள். பசி, பட்டினி, வறுமை என நாடு முழுவதும் வெளியாகும் சோகக் கதைகளுக்கு அளவே இல்லை. ஏழைப் பணக்காரர் என்ற எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கொரோனா கொடிய அரக்கனாக மாறியுள்ளது.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றில் இறந்து போன ஒருவர், தனது மனைவிக்கு மரணப்படுக்கையில் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் தன் மனைவியைப் பற்றி எழுதியுள்ள வரிகள் படிப்பவர்களின் இதயத்தை நொறுக்கும்படியாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநிலத்தின் தலைநகரான டான்பரில் உள்ள மருத்துவமனையில் ஜொனதன் கொய்லோ அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது மனைவிக்கும் நோய்த் தொற்று வராமல் இருக்கத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் கடுமையான சிகிச்சைக்குப் பின்பும் ஜொனதன் கடந்த 22 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே அவரது மனைவி கேட்டி கொய்லோவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே அவரது கணவரின் உயிர் பிரிந்துள்ளது.
ஜொனதன், அந்த நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்துள்ளார். நோய்த் தொற்று வராமல் இருக்க முன்னெச்சரிக்கையோடு இருந்துள்ளார். ஆனால் கொரோனா அவரை விடவில்லை தொற்றிக் கொண்டது. அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அனைத்தும் பலனளிக்காமல் 32 வயதிலேயே மறைந்துவிட்டார்.
கேட்டி, தனது கணவர் மறைந்தபின் போனை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், ‘மிகவும் அதிருஷ்டசாலி நான்’ எனக் குறிப்பிட்டிருந்த அவரது ஜொனதன், ‘நான் கேட்ட சிறந்த வாழ்க்கையை எனக்கு கேட்டி கொடுத்திருக்கிறார்’ என்று எழுதி இருந்துள்ளார். கணவரின் இந்தக் கடிதத்தை கண்டதும் நெகிழ்ந்து போய் உள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. மற்றொரு குழந்தை பிறந்து 10 மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. இதனிடையே தான் இவர் கணவரைப் பிரிந்துள்ளார் கேட்டி. இது குறித்து BuzzFeed தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் மூலம் கடல்கடந்து இந்தக் காவிய கடிதம் பலரது கைக்குப் போய் கிடைத்து வருகிறது.
ஜொனதன் அவரது கடிதத்தில், “நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன். நான் கேட்டிருக்கக்கூடிய மிகச் சிறந்த வாழ்க்கையை நீ எனக்குக் கொடுத்திருக்கிறாய். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உன் கணவராகவும், பிராடின் மற்றும் பென்னிக்கு தந்தையாகவும் இருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. கேட்டி, நீ நான் சந்தித்த மிகவும் அழகான அக்கறை கொண்ட நபர். நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். அதே ஆர்வம்தாம் என்னை உன்னைக் காதலிக்க வைத்தது”தனது குறிப்பில் கூறியுள்ளார்.