வடகொரியா மீது தாக்குதல் நடத்தவும் தயாராக இருப்பதாகவும், ஆனால் அது தங்கள் விருப்பம் இல்லை என்றும் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சமீபத்தில் சோதனை செய்தது. வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது. இந்த சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டதோடு, இந்த ஏவுகணை அமெரிக்கர்களுக்கு சுதந்திர தின பரிசு என தெரிவித்திருந்தார். வடகொரிய அதிபரின் இந்த பேச்சு வெள்ளை மாளிகையை கொதிப்படைய வைத்துள்ளது.
இதனால், வடகொரியா மீது புதிய தடைகளை கொண்டு வருமாறு ஐநாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்திற்கு பின் பரிந்துரைகள் அடங்கிய வரைவு தீர்மானத்தை அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி வழங்கினார். மேலும் வடகொரியா மீது தாக்குதல் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஆனால் அது தங்கள் விருப்பம் இல்லை என்றும் நிக்கி ஹேலி தெரிவித்தார். அதேசமயம் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்கக் கூடாது என்றும் ஐநாவில் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் வடகொரியாவுடன் வணிகம் புரிந்து வரும் நாடுகளுக்கும் தடைகள் விதிப்பது குறித்து அதிபர் ட்ரம்ப் உடன் பேசியுள்ளதாகவும் நிக்கி ஹேலி தெரிவித்தார்.