அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போரால், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என சர்வதேச நிதியமான ஐஎம்எஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தது. கடந்த ஜூலை மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது.
சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதிக் கொள்கைகளால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்த்தினார். அதற்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும் கூடுதல் வரி விதித்தது.
இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இது உலகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.