பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடியுரிமை திருத்தச் சட்டம் Citizen Amendment Act (CAA) கடந்த மார்ச் 11 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்தே, போராட்டங்கள் மீண்டும் வெடிக்கத் தொடங்கி உள்ளன. எனினும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். எனினும், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ சட்டத்தை, எந்த மாநிலங்களும் அதைச் செயல்படுத்த முடியாது எனக் கூற முடியாது என்பது பல வழக்கறிஞர்களின் வாதமாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து அமெரிக்கப் பாடகியான Mary millben புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஜனநாயகத்தின் உண்மையான வெளிப்பாடாகும். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் இது வழங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, மணிப்பூர் விவகாரத்திலும் அவர் கடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், ‘உண்மை: இந்தியா தனது தலைவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய மாநிலமான மணிப்பூரின் தாய்மார்கள், மகள்கள் மற்றும் பெண்களுக்கு நீதி வழங்கப்படும். உங்கள் சுதந்திரத்திற்காக பிரதமர் மோடியும் தொடர்ந்து பாடுபடுவார்’ எனத் தெரிவித்திருந்தார்.
இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவில் மோடியைச் சந்தித்த பாடகி மெல்பென், அவர் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.