ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து, வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்கள், பீரங்கி வாகனங்களுடன் புறப்பட்டிருக்கும் ஏர்லிங்டன் கப்பல், வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அபிரகாம் லிங்கன் என்ற மற்றொரு போர்க் கப்பலுடன் இணைந்துக் கொள்ளும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிரிகளின் இலக்குகள் மீது வேகமாக குண்டுகளை வீசி தாக்கும் திறன் படைத்த பி-52 போர் விமானங்களும் கத்தாரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் மூலம் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு என ஈரான் பதில் அளித்துள்ளது. படைகளைக் குவித்து, ஈரானை மனரீதியாக பலவீனப்படுத்தவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், ஈரானுடன் சண்டையிட விருப்பம் இல்லை என்றும், அதே சமயம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தங்களது படைகளை தற்காத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.