அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண வேளாண் துறையினர் ஆசிய விஷ வண்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் ஆசிய விஷவண்டை அடையாளம் கண்டனர்.
தற்போது, அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் நாட்டின் முதல் ஆசிய விஷ வண்டுகளை முதல்முறையாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அவை கொலைகார வண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கனடா எல்லைப்பகுதியில் உள்ள பிளைய்னே என்ற ஊரில் உள்ள மரப்பொந்தில் விஷவண்டின் கூட்டை பூச்சியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு பல விஷவண்டுகள் இருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். அவற்றை முற்றிலும் அழிக்கும் பணிகளில் வாஷிங்டன் வேளாண் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மோசமான பருவநிலை காரணமாக வெள்ளிக்கிழமையன்று வண்டுகள் அழிக்கும் பணிகள் தடைபட்டன.
"ஆசிய விஷ வண்டுகள் அமெரிக்காவில் உருவானவை அல்ல. அவை வெளியில் இருந்து வந்தவை., உலகின் மிகப்பெரிய விஷ வண்டுகளாக உள்ளன. சில வண்டுகள் சேர்ந்து மிகச்சில மணி நேரங்களில் தேனீக்கள் கூட்டத்தையே அழித்துவிடும் அளவுக்கு ஆபத்தானவை" என்கிறது வாஷிங்டன் வேளாண் துறை அதிகாரிகள்.
பொதுவாக இந்த விஷ வண்டுகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்து இல்லை என்றாலும், உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று வேளாண் துறை ஆய்வாளர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.