இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் நடத்தை குறித்தும், அவரது நிறுனம் லஞ்சம் வழங்கியதா என்பது குறித்தும் அமெரிக்கா தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘அஸுர் பவர் குளோபல்’ எனும் புதுப்பிக்கத்தக்க இந்திய எரிசக்தி நிறுவனம் அமெரிக்காவின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எரிசக்தித் திட்டம் தொடர்பில் தமக்குச் சாதகமாக நடந்துகொள்ள இந்தியாவில் அதிகாரிகளுக்கு அதானியோ அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ லஞ்சம் வழங்கினரா என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தீவிரமாய் விசாரித்து வருவதாக ஆங்கில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விசாரணையை, நியூயார்க் கிழக்கு மாவட்ட தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் வாஷிங்டனில் உள்ள நீதித்துறை மோசடித் தடுப்புப் பிரிவும் தொடங்கியிருப்பதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில் இதுதொடர்பாக இமெயில் வழியாகப் பதிலளித்துள்ள அதானி குழுமம், ’எங்கள் நிறுவனத் தலைவருக்கு எதிரான எந்த விசாரணை குறித்தும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. மிக உயர்ந்த நிர்வாகத் தரத்துடன் எங்கள் தொழிற்குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடப்பிலுள்ள லஞ்சல், ஊழல் தடுப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு முழுமையாக இணங்கி நடப்போம்’ என அதில் பதிலளித்துள்ளது. எனினும் இந்தக் கருத்துக்கு அமெரிக்க விசாரணை அதிகாரிகள் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ISPL T10: அரையிறுதி வரை முன்னேறிய சூர்யா அணி.. கோப்பையை உச்சிமுகர்ந்த கொல்கத்தா!
மேலும், அதானியின் சம்பந்தப்பட்ட அஸுர் பவர் குளோபல் எரிசக்தி நிறுவனமும் இதற்குப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆங்கில ஊடகமே செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில், அமெரிக்க நீதித்துறை இதுவரை அதானி மீதோ அல்லது அவரது நிறுவனத்தின் மீதோ எந்தவொரு குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. ஆனால், அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகளுடன் ஏதேனும் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டால், கூட்டரசு வழக்கறிஞர்கள் வெளிநாட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கையாள அமெரிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. அதானிக்கு எதிராக அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியிருக்கும் நிலையில், இது வரும் வார பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் காரணமாக அதானி குழுமப் பங்குகள் சரிந்தன. பின்னர், அந்தக் குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம், தற்போது அந்த இழப்பிலிருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.