அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவரே அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார். இதையடுத்து, துணை அதிபரான கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டார். பின்னர் அவரே, ஜனநாயக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டில் வழக்கம். அந்த வகையில், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு ட்ரம்ப் ஆகிய இருவரும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விவாத நிகழ்ச்சிக்கு இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவாதத்தை ABC நடத்த உள்ளது. இந்த விவாத நிகழ்ச்சி இருவருக்கும் முதல்முறையாக நடைபெற இருக்கிறது.
விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து ட்ரம்ப், “விவாதங்களை நடத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் விவாதங்களை எதிர்நோக்குகிறேன். ஏனென்றால், நமது சாதனை நேராக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்” என பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே நடைபெற்ற விவாத நிகழ்வின்போது பைடன் பதில் சொல்ல முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு ட்ரம்ப் பிரசார மேடைகளில் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கிப் பேசி வருகின்றனர். அதிலும் டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸின் இனம் பற்றி சமீபகாலமாகப் பேசி வருவது அமெரிக்க மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சமீபத்தில் (ஆக.9) Ipsos நடத்திய கருத்துக்கணிப்பில் ட்ரம்பைவிட, கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் 42 சதவீதமும் ட்ரம்ப் 37 சதவீதமும் ஆதரவை பெற்றுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.