அமெரிக்காவின் 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் களம் கண்டனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. கருத்துக்கணிப்புகளில்கூட, கமலா ஹாரிஸே வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் வென்றுள்ளனர். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்படி விர்ஜினியாவில் 10வது மாவட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர் (எம்பி) பொறுப்புக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாஷ் சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியாவார். இவர், குடியரசு கட்சி வேட்பாளரான மைக் கிளான்சியை தோற்கடித்தார். வழக்கறிஞரான சுகாஷ் சுப்பிரமணியம் இதற்கு முன்பு பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் அட்வைசராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுகாஸ் சுப்பிரமணியனின் தந்தை சென்னையையும் தாய் பெங்களூரையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 1970களில் அமெரிக்காவில் குடியேறியனர்.
இவரைத் தவிர, இலினாய்ஸ் மாகாணத்திலிருந்து ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தியும் வெற்றிபெற்றார். மிச்சிகனிலிருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதனேதர் வெற்றிபெற்றார், கலிஃபோர்னியாவிலிருந்து ரோ கன்னா, வாஷிங்டனிலிருந்து பிரமிள ஜெயபால் ஆகியோர் மீண்டும் வெற்றிபெற்றனர். கலிஃபோர்னியாவிலிருந்து அமி பெரா 7ஆவது முறையாக வெற்றிபெற்றார். அரிசோனாவில் இருந்து அமிஷ் ஷா முன்னிலையில் உள்ளார். இப்படியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.