உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா, மாபெரும் ராணுவ பலத்தையும் கொண்டது. உலக வல்லரசான அமெரிக்காவின் அதிகார மையமாகப்போவது யார் என்ற கேள்விக்கு நவம்பர் 5-ஆம்தேதி நடைபெறும் தேர்தலுக்குப்பின் விடை கிடைத்துவிடும்.
1945-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான தேர்தல்களில் இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, பல்வேறு நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக்கட்சி, சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் பங்கை முற்றிலுமாக முறிக்கக் கூடியதாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் அதேவேளை, கமலா ஹாரிசின் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச கொள்கை வேறுவிதமாக இருக்கிறது. கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளநிலையில், நேட்டோ உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் அமெரிக்கா முக்கிய பங்காற்றுகிறது.
வரும் 5-ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரிசோனாவில் வாக்கு சேகரித்த டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் போட்டியாளரான ஹிலரி கிளிண்டன், தற்போதைய போட்டியாளரான கமலா ஹாரிஸ் ஆகியோரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்தார்.
கமலா ஹாரிசுக்கு ஐக்யூ மிகவும் குறைவு என்றும் அவர் பாறை போன்று எதற்கும் அசைந்து கொடுக்கமாட்டார் என்றும் கடுமையாக பேசினார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஒரு முழு முட்டாள் என்றும் ட்ரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினார்.
நவேடாவில் கமலா ஹாரிஸ் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் மேடையில் வாக்கு சேகரித்தார். நமது வலிகள் முக்கியம், நாம் முக்கியம் என்று கூறி கமலா ஹாரிசுக்காக ஜெனிபர் லோபஸ் பரப்புரை செய்தார்.பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்கும் விதமாக ட்ரம்ப் பேசிவருவதாக கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.
ஓபாமா கேர் எனப்படும் முக்கியமான மருத்துவத்திட்டம், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்பட்டுவிடும் என்று கமலா தெரிவித்தார்.
ட்ரம்புக்கும், கமலாவுக்கும் இடையேயான போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், 7 முக்கிய மாகாணங்கள், அமெரிக்காவின் புதிய அதிபரை தீர்மானிப்பவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.