அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். ஆனால் குற்றங்கள் குறைந்து வருவதாக அமெரிக்க காவல் துறையான FBI யின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
9ஆவது மாதவாக்கில் கூட கருக்கலைப்புகள் அதிகளவில் நடப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால் கருக்கலைப்புகளில் 21 வாரங்களை கடந்த பின் செய்யப்படுபவை ஒரு சதவீதம் மட்டுமே எனவும் அதுவும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே செய்யப்படுவதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பிராஜெக்ட் 2025 என்ற பெயரில் அமெரிக்க அரசில் வலதுசாரி சித்தாந்த அடிப்படையிலான மிகப்பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன. இந்த திட்டம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என ட்ரம்ப் திட்டவட்டமாக கூறினார். ஆனால் அவர் கூறியுள்ள கொள்கை சீர்திருத்தங்கள் பலவும் பிராஜெக்ட் 2025இன் முக்கிய அம்சங்களை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்க நகரங்கள் சிலவற்றில் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிகரித்து குற்றங்கள் பெருகியுள்ளதாக குற்றஞ்சாட்டினார் ட்ரம்ப். ஆனால் பெரும்பாலான குடியேற்றங்கள் சட்ட ரீீதியானதாக உள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குற்றங்களில் பெரும்பாலும் ஈடுபடுவது உள்நாட்டவர்களே என்றும் குடியேறியவர்கள் செய்யும் குற்றங்கள் மிகக்குறைவு என்றும் கேட்டோ இன்ஸ்டிட்யூட் போன்ற அமைப்புகளின் ஆய்வுகள் கூறுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை சாப்பிடுவதாக ட்ரம்ப் கூறிய நிலையில், அது தவறான தகவல் என விவாத நிகழ்ச்சி நடுவர் டேவிட் முர் விளக்கம் அளித்தார்.
2020இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மோசடி செய்து வெற்றிபெற்றார் என ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டினார். ஆனால் மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை, அவை வெறும் யூகங்களே என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தன.
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும் சில தவறான தகவல்களை கூறினார். ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் போது வேலைவாய்ப்பின்மை அளவு வரலாறு காணாத அளவு உயர்ந்திருந்ததாக கமலா ஹாரிஸ் கூறினார். ஆனால் 1929இல் ஏற்பட்ட பெரும் மந்த நிலை சூழலில்தான் அமெரிக்கா மிகமோசமான பொருளாதார சிக்கலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.