மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிடலாம் என்பதால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அதிபர் ட்ரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவதால் அவரின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து ட்ரம்ப் ட்வீட் செய்தார். அந்த் பதிவுகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.