வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா மற்றும் துருக்கியின் பெயரை நீக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்குப் பதிலடியாக உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இந்தியா உரிய வாய்ப்புகளை அளிக்காவிட்டால், இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்தியாவுக்கான வர்த்தக சலுகைகளை திரும்பப் பெறப் போவதாகவும் வரிச் சலுகை வழங்காவிட்டால் நடவடிக்கை பாயும் என்றும் டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவையும், துருக்கியையும் நீக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என மத்திய வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வாதவான் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய, அமெரிக்க இடையிலான நட்பு ஆழமானது. எனவே வர்த்தக விவகாரங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலால் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.