இனவெறியின் காரணமாக அமெரிக்காவில் போலீசாரால் இன்னொரு கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது எனக் கூறி மீண்டும் ஒரு போராட்டம் அந்நாட்டை உலுக்கத் தொடங்கியுள்ளது. அது நிகழ்ந்தது, ப்ளாய்ட் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதேநாளில்தான்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணத்தின் இறுதி நொடிகளில் 'என்னால் மூச்சு விட முடியவில்லை' (I can't breathe) அவர் பேசிய வரிகளே இனவெறிக்கு எதிரான மக்களின் போராட்டங்களுக்கும் வாசகங்களாக அமைந்தது. சர்வதேச அளவில் பிளாய்ட் மரணத்தை ஒட்டி இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதுவும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய காலகட்டத்தில் நடந்த போராட்டங்கள் இனவெறிக்கு மணியடிக்கும் வகையில் அமைந்தது. இந்தநிலையில்தான் கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கும் நிலையில், ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் ஆகியிருக்கிறது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தத் தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்ட் உறவினர்களும், இனவெறிக்கு எதிரானவர்களும் கொண்டாடி வரும் வேளையில், இந்த தீர்ப்பு சொல்லப்பட்ட அதே நேரத்தில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஓஹியோ மாகாணத்தின் காவல்துறை அவசர எண்ணுக்கு நேற்று அழைப்பு வந்திருக்கிறது. எதிரே பேசிய குரல், ``எனது பாட்டியை இங்கே தாக்குவதற்கு முற்படுகிறார்கள். என்னையும் கத்தியை வைத்து தாக்க வருகிறார்கள்" என்று கூறியதோடு, முகவரியை சொல்கிறது.
அதன்படி, சம்பவ இடத்துக்கு ஓஹியோ காவல்துறையை சேர்ந்த நிக்கோலஸ் ரியார்டன் எனும் அதிகாரி தனது சக அதிகாரிகளுடன் விரைகிறார். நிக்கோலஸ் சம்பவ இடத்தை அடைந்தபோது, அந்த இடத்தில் இருந்த பல பெண்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அந்த சண்டையில் கீழே விழும் பெண்ணிடம் சென்று, `இங்கே என்ன நடக்கிறது' எனக் கத்துக்கிறார் நிக்கோலஸ். அந்த பெண் பதிலளிக்கும் முன்பே அங்கிருந்த வேறு இரு பெண்கள் சண்டையிடுகின்றனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிக்கோலஸ் ஒருகட்டத்தில் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். இதில் ஒரு பெண் சுருண்டு விழுகிறார். இந்தக் காட்சிகள் எல்லாம் நிக்கோலஸ் தனது சட்டையில் வைத்திருந்த கேமரா மூலம் வீடியோவில் பதிவாகிறது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. மேலும், விழுந்த பெண் 16 வயதே ஆன கறுப்பின சிறுமி மகியா பிரையன்ட் என்பவர் எனக் கூறப்படுகிறது. இந்த சிறுமிதான், சண்டை நடக்கிறது எனக் காவல்துறையை போனில் அழைத்தவர். ``சண்டையை நிறுத்துவதற்காக சிறுமி மகியா பிரையன்ட் காவல்துறையை அழைத்திருக்கிறார். ஆனால் நிக்கோலஸ் சண்டையை நிறுத்தாவிட்டால் கூட பரவாயில்லை, வந்த வேகத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். மகியா போலீஸின் உதவியை எதிர்பார்த்தாளே, தவிர அவர்களின் குண்டுகளை அல்ல. கறுப்பினத்தவர்களை கண்டாலே அவர்கள் குற்றவாளிகள் என்ற நினைப்பில் தான் நிக்கோலஸ் இந்த செயலை செய்திருக்கிறார்" என்று மகியா இறப்பு தொடர்பாக நிக்கோலஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறை தரப்பில், ``சிறுமி மகியா சண்டையின்போது தன் கையில் கத்தி ஒன்றை வைத்திருந்தார். அதை வைத்து அவர் ஒரு பெண்ணை தாக்கச் சென்றார். தாக்குதலை தடுக்கவே நான் சுட்டேன்" என்று நிக்கோலஸ் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் நிக்கோலஸை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், நேர்மையான, வெளிப்படையான விசாரணை இந்த விவகாரத்தில் நடக்கும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, சிறுமியின் கொலை, இனவெறியின் காரணமாகவே நிகழ்ந்தது எனக் கூறி, 'Say her name: Ma'Khia Bryant' என இனவெறிக்கு மீண்டும் ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது. `she was 16' என்று பதாகைகள் மற்றும் சாலைகளில் எழுதி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பிளாய்ட் மரணத்தை ஒட்டி தீர்ப்பு கிடைத்த நாளில் நடந்துள்ள இந்த சம்பவங்கள், அமெரிக்காவில் மீண்டும் ஓர் இனவெறி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.