அமெரிக்காவில் வேலை செய்து வரும் ஹெச்-1பி விசாதாரார்களின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வந்த ஹெச்-4 விசாவை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தில், ஹெச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் ஹெச்-4 விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த ஹெச்-4 விசா 2015 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு 41,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்-4 விசா வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை சுமார் 36,000 பேருக்கு ஹெச்-4 விசா வழங்கப்பட்டுள்ளது. ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினரில் பெரும்பாலானோர் இந்தியர்களும், சீனர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே பணியமர்த்துவோம் என்று கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்-1பி விசாவுடன் அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கைத் துணைக்கு அளிக்கப்படும் ஹெச்-4 விசாக்கள் மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திடீர் முடிவினால் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழ்வதற்காக அமெரிக்காவுக்கு வரும் 90 சதவீதத்தினருக்கு, குறிப்பாக இந்திய பெண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட விசா சட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.