ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அதிபர் ட்ரம்ப்பின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதால், அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை குறைக்கும் வகையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்திருந்தார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகு முடிவெடுக்காமல் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக, சபை உறுப்பினர்களுக்கு நான்சி பெலோசி கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அதிகாரங்களைக் குறைப்பதற்கான வாக்கெடுப்பில் 224 பேர் ட்ரம்பிற்கு எதிராகவும், 194 பேர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் ஈரான் திடீர் தாக்குதல்களை நடத்தாத வரையில் எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் ஜனநாயக கட்சியினரிடம் கலந்தாலோசிக்காமல் ட்ரம்ப் எடுக்க முடியாத வண்ணம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.