அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் உள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் நேருக்குநேர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளானது. அப்போது தடுமாற்றம் கண்ட ஜோ பைடன் குறித்தும் அவர்களுடைய கட்சியினராலேயே விமர்சிக்கப்பட்டது. என்றாலும், இத்தேர்தலில் இருந்து தாம் பின்வாங்கப்போவதில்லை என் ஜோ பைடனே உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான், கடந்த ஜூலை 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டொனால்டு டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதின் மேல் துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றது. அவரது காதில் இருந்து ரத்தம் கொட்டினாலும், நூலிழையில் ட்ரம்ப் உயிர் தப்பினார். அதேநேரத்தில், இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்திற்கு உலக நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக எதிர் வேட்பாளரும் அதிபருமான ஜோ பைடன், “எனக்கும் ட்ரம்புக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாங்கள் எதிரிகள் இல்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன். நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என்றவகையில் ஒன்றுபட்டு நிற்பது அவசியம். தேர்தலை வாக்குகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தோட்டாக்களால் அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் போக்கையே மாற்றக்கூடும் எனவும் தேர்தல் பரப்புரையில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் மேலும் சிலர், ”இது டொனால்டு ட்ரம்பின் திட்டமிட்ட நாடகமாகக்கூட இருக்கலாம்” எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பற்றிய விவரங்களும் வெளியாகி வருகின்றன. தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அறியப்படும் அந்த இளைஞர், பென்சில்வேனியாவில் உள்ள பேத்தல்பார்க் என்ற பகுதியை சேர்ந்தவர். அந்த ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 2022 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அவர், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். இதற்காக அவர் 500 டாலர் பரிசுபெற்றுள்ளார். பள்ளியில் படித்தபோது அவர் மிகவும் அமைதியானவராக இருந்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வீட்டின் அருகே, ஒரு நர்ஸிங் ஹோமில் உள்ள சமையல் கூடத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் CLAIRTON ஸ்போர்ட்ஸ்மேன்ஸ் க்ளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுள்ளார். 171 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை எளிதில் சுடும் திறன் படைத்தவராக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக, துப்பாக்கி சுடும் க்ளப்பிலிருந்து நீக்கப் பட்ட அவர், எப்போதும் தனிமையில் இருப்பதையே விரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது குடும்பத்தினர், வகுப்புத்தோழர்கள், ஆசிரியர்கள், சக ஊழியர்கள் என யாருமே மேத்யூவின் மனநிலையை அறிந்திருக்கவில்லை. ட்ரம்ப் மீது துப்பாக்கியால் சுட வேண்டுமென திட்டம் தீட்டியதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
ட்ரம்ப்பின் பரப்புரை நடந்த பட்லர் டவுனுக்கு, பேத்தல் பார்க்கிலிருந்து 70 கிலோ மீட்டர் பயணித்து வந்துள்ளார். அதற்காக ஏணி ஒன்றையும் வாங்கியுள்ளார். மேலும் 50 தோட்டா குண்டுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் (Republican Party) என்பதை சில தரவுகள் காட்டுகின்றன. அவர் 2021-ல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவான `ஆக்ட் ப்ளூ’ (ActBlue) அமைப்புக்கு 15 டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவர், இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்த தகுதி பெற்றிருந்தார். அந்த நபர் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை என்பதால் புலனாய்வு அதிகாரிகள் அவரை அடையாளம் காண டிஎன்ஏவைப் பயன்படுத்தினர் என்றும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு தேர்தல் நிதியாக ரூ.376 கோடியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவுள்ளதாக முதலில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இருப்பினும், மறைமுகமாக ட்ரம்புக்கு ஆதரவாக அமெரிக்க தொழிலதிபர்களுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை ட்ரம்பு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு வெளிப்படையாக மஸ்க் ஆதரவை அறிவித்தார்.
இதையடுத்து, அவருக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சூப்பர் பிஏசி நிறுவனத்திடம் 4.5 கோடி டாலர் (இந்திய மதிப்பின்படி ரூ.376 கோடி) நிதி வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவிர, தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்களும், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்சம் டாலர்களும் ட்ரம்புக்கு நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ட்ரம்புக்கு ஆதரவும் பெருகிவரும் நிலையில், தான் சார்ந்த குடியரசுக் கட்சியின் துணை அதிபராகப் போட்டியிடும் வேட்பாளரை அவர் அறிவித்துள்ளார். அதன்படி, குடியரசுக் கட்சி சாா்பில் துணை அதிபா் பதவிக்கு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினருமான ஜே.டி.வேன்ஸ் துணை அதிபராகப் போட்டியிடுகிறார். இவருடைய மனைவி உஷா சிலிகுரி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். உஷாவின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள்.
கலிபோர்னியாவின் சான் டீகோ பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவந்த உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்குரைஞரான உஷாவுக்கு, யேல் சட்டக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற ஜே.டி.வேன்ஸுடன் காதல் மலர்ந்தது. இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.