அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரைக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நோய் பரவலில் இருந்து காப்பாற்றும் வகையில் அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரை கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர வேகமாக பரவும் ஒமைக்ரான் திரிபுவுக்கு எதிராகவும் ஆற்றலுடனும் செயல்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் மருத்துவமனைகளில் அனுமதியாவதை 90 சதவிகிதம் வரை தடுக்கலாம் என்றும், மோசமாக பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளையும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்றும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆய்வில் ஒமைக்ரானுக்கு எதிராகவும் இந்த மாத்திரை சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா முழுவதும் உடனடியாக மாத்திரைகளை விநியோகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.