அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆண்டுதோறும் நிலவும் குளிரைவிட, இந்தாண்டு பல மாகாணங்களிலும் இந்த தலைமுறை கண்டிராத அளவுக்கு பனிப்பொழிவு இருந்து வருகிறது. சொல்லப்போனால் இந்த குளிர், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் குளிரைவிட மோசமானதாக கருதப்படுகிறது. தற்போது அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மோசமான வெப்ப நிலை காரணமாக சுமார் 15 லட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும், குளிர் கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்பட பல மாகாணங்களில் மைனஸ் டிகிரி வெப்பநிலை நிலவுதால், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மான்டானா மகாணத்தில் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. இதேபோல், Des Moines பகுதியில் மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. அத்துடன் பனிப் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக நேற்று மட்டும் அமெரிக்காவில் 3,100 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் விமானங்கள் தாமதமாகியுள்ளன. பனிக்கட்டிகளால் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. உறைய வைக்கும் பனிப்பொழிவு அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. அத்தியாவசிய தேவைக்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் அந்நாட்டு விலங்குகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையொன்றில் நடந்து செல்லும் பசு ஒன்றின்மீது பனி அப்படியே படர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.