அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு சொந்த நாட்டிற்கு சென்றவர்கள், மீண்டும் அதே வேலைக்கு திரும்பினால் H-1B விசா வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு H-1B விசா உட்பட பல்வேறு விசாக்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் இந்தியர்கள்தான் அதிக அளவில் H-1B மற்றும் H-4 விசாக்களை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக ஐடி துறையில் பலர் இப்படி H-1B உடன் பணியாற்றுகிறார்கள்.
இச்சூழலில், கொரோனா வைரஸ் பரவலால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக கூறி, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பணிபுரிய வருவோருக்கான விசாக்களை இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு வெளிநாட்டவர்கள், அமெரிக்க தொழில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் தற்போது H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதற்கான தடையில் சில தளர்வுகளை ட்ரம்ப் வழங்கியுள்ளார். அதன்படி அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு சொந்த நாட்டிற்கு சென்றவர்கள், மீண்டும் அதே வேலைக்கு திரும்பினால், (அதே நிறுவனத்தில்) அவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும்.
இவர்கள் உடன் அமெரிக்கா வரும் பணியாளரின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் H-4 விசா வழங்கப்படும் என்று தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் இந்த தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.