உலகம்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கப்பல்களை திருப்பி அனுப்பிய உருகுவே
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கப்பல்களை திருப்பி அனுப்பிய உருகுவே
உருகுவேயில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
அண்டார்டிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட, 'கிரெக் மார்டிமர்' என்ற, சொகுசு கப்பல், தென் அமெரிக்க நாடான, உருகுவே அருகே கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், இந்தக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இவர்களில் 130க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 96 பேர் ஆஸ்திரேலியாவையும், 16 பேர் நியூசிலாந்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த 112 பேரையும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்ப உருகுவே அரசு திட்டமிட்டு, சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு பேர் மிகவும் மோசமான நிலையிலிருந்ததால் அவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உருகுவே வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ தல்வி தெரிவித்தார்.