காதல் என்பது ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம். அது ஒரு மனிதனுக்குள் வந்துவிட்டால் பசி, தூக்கம், மகிழ்ச்சி, மாற்றம் என எல்லா வகையிலும் அவனுடைய உணர்வுகளை உணர முடியும் என்பதற்கு எத்தனையோ விஷயங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அதே காதல், சில சமயங்களில் கொலைகாரனாகவும் ஆக்கி விடுகிறது. ஆம், தனது காதலி சிகையலங்காரம் செய்துகொண்டதற்காகவே அவரையே கத்தியால் குத்தி காதலர் ஒருவர் மாய்த்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் குவால் (49). இவருடைய காதலி கார்மென் மார்டினெஸ் சில்வா (50). இந்த நிலையில், கார்மென் தன்னுடைய தலைமுடியை வெட்டி அலங்கரித்து உள்ளார்.
ஆனால், காதலியின் இந்த புதிய சிகை அலங்காரம் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் கோபத்தில் இருந்துள்ளார். தவிர, இதுதொடர்பாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன கார்மென், அன்று இரவு அவரது மகளின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். தொடர்ந்து பொழுது விடிந்ததும் தன் சகோதரர் வீட்டுக்குப் போய் தஞ்சமடைந்துள்ளார். இதற்கிடையே, தோழி ஒருவரை தொடர்புகொண்ட கார்மென், பெஞ்சமின் உடனான உறவு முடிந்துவிட்டது என அவரிடம் கூறி விடும்படி தெரிவித்துள்ளார்.
ஆனால், கார்மெனை தேடி அலைந்த பெஞ்சமின், அவர் சகோதரர் வீட்டில் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கே சென்றுள்ளார். அங்கே, கார்மென் வீட்டில் இல்லை என பதில் வந்ததையடுத்து, அவர் திரும்பிச் சென்றுள்ளார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் பெஞ்சமின், கார்மெனை தேடி வந்துள்ளார். ஆத்திரத்தில் எதிரில்வந்த கார்மென்னின் சகோதரரை அவர், கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த கார்மன் சகோதரரை காப்பாற்றுவதற்காக ஓடி வந்துள்ளார்.
இதையடுத்து, பெஞ்சமினின் கோபம் கார்மென் மீது திரும்பியுள்ளது. அவரையும் விடாமல் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் கார்மென் படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் கார்மெனின் உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து, காயங்களுடன் கிடைந்த அவருடைய சகோதரரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், இந்தச் சண்டையைத் தடுக்க முயன்ற 2 பேர் மீதும் பெஞ்சமின் கொலைவெறி தாக்குதலை நடத்தியதாகவும், எனினும் அவர்கள் தப்பிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் ஆத்திரம் தீராத பெஞ்சமின், ஆயுதத்துடன் அதே இடத்தில் இருந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், பின்னர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்மன் இறுதிச் சடங்கிற்காக நிதி திரட்ட அவரது குடும்பத்தினரால் GoFundMe பக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. "இந்த இழப்பால் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது, எங்கள் அன்புக்குரிய கார்மனுக்கு இதுபோன்ற ஒரு சோகம் நடக்கும் என்று நாங்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இந்த நேரம் எங்களில் பலருக்கு கடினமானது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் குடும்பம் அவருக்குத் தகுந்தவாறு அவரை ஓய்வெடுக்க வைக்க உதவும் எதையும் நன்கொடையாக வழங்குமாறு உங்கள் இதயத்தில் உணருமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என நிதி திரட்டலின் ஒரு பகுதி தெரிவித்துள்ளது.