அமெரிக்காவின் சமீபத்திய கோவிட்-19 இறப்புகளில் சுமார் 99.2% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களாக உள்ளனர் என்று தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அந்தோனி ஃபவுசி, " இந்த மரணங்கள் அனைத்தும் தவிர்க்கக்கூடியவை மற்றும் தடுக்கக்கூடியவை என்பது மிகவும் வருத்தமாகவும், சோகமாகவும் இருக்கிறது. கொரோனாவின் வலிமையான எதிரியாக தடுப்பூசி உள்ளது, கொரோனா தடுப்பூசி மரணத்தை தடுப்பதில் மிகுந்த பயனளிக்கிறது" என்று அவர் கூறினார்.
மேலும், “அமெரிக்காவில் சிலர் கருத்தியல் அடிப்படையில் தடுப்பூசியை எதிர்க்கின்றனர். தொற்றுநோயை எதிர்ப்பதற்கான ஆயுதம் நாட்டில் உள்ளன, அதனால் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பொதுவான எதிரி கொரோனா வைரஸ் என்பதை மக்கள் உணர வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் செலுத்துவதற்கு போதுமான தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளன. இதனால் அமெரிக்கா மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆனால் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக எதையும் செய்யும் மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இதுவரை 3.37 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 6.05 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். உலகில் அதிகளவில் கொரோனா இறப்புகள் பதிவான நாடாக அமெரிக்கா உள்ளது.