புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட்டு ஒருமனதாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
புல்வாமா தாக்குதல் கொடூரமானது, கோழைத்தனமானது என விமர்சித்துள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், இந்தக் கொடூர தாக்குதலை நடத்திய வர்கள் தண்டிக்கபடவேண்டும் எனவும் அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐநா பாதுகாப்புசபை தீர்மானங்களை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனாவும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்திருப்பது இந்தியா வுக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.