அமெரிக்காவில் விமானம் தரையிறங்கிய போது அவசர வழியை திறந்து அதன் இறக்கையில் சறுக்கி சென்று கீழே விழுந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் சான் டைகோ நகரில் இருந்து சிகாகோ நகருக்கு 'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' விமானம் (போயிங் 737) நேற்று காலை வந்தது. சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானம், நிற்பதற்காக ஓடுபாதையில் சுற்றி வந்துக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வேகம் சற்று குறைய தொடங்கியதும், பயணிகள் இறங்குவதற்காக தங்களின் சீட்பெல்ட்டை கழற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பயணி ஒருவர், விமானத்தின் அவசர கதவை திடீரென திறந்தார். இதனை அதிர்ச்சியுடன் மற்ற பயணிகள் பார்த்துக் கொண்டிருந்த போதே, கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தின் இறக்கையில் தனது பெட்டிகளுடன் இறங்கி சறுக்கியவாறே சென்று கீழே விழுந்தார்.
இதையடுத்து, விமானக் குழுவினர் இதுதொடர்பாக விமான நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் உடனடியாக ஓடுபாதைக்கு ஜீப்பில் வந்த போலீஸார், அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில், அவரது பெயர் ராண்டி ஃபிராங்க் (57) என்பது தெரியவந்தது. தான் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் அனைவரும் இறங்கும் வரை காத்திருக்க வேண்டும்; ஆதலால் அவசர வழியை பயன்படுத்தியதாக போலீஸாரிடம் அவர் கூறியுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதன்முறை அல்ல...
விமானங்களில் இதுபோன்ற சேஷ்டைகளில் பயணிகள் ஈடுபடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதம் 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பயணி ஒருவர் ஆர்வக்கோளாறில் அவசரக் கதவை திறக்க முயன்றார். இதனை பார்த்த விமானப் பணிப்பெண், அவரது தலையில் டீ கோப்பையை கொண்டு தாக்கி அவரது செயலை தடுத்து நிறுத்தினார். நடுவானில் விமான அவசரக் கதவை திறந்தால் வெளியே இருக்கும் காற்று பல நூறு கி.மீ. வேகத்தில் விமானத்துக்குள் நுழையும். அப்போது விமானத்தின் சமநிலை தவறி விமானம் விபத்தில் சிக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.