“உலகளவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை குறைத்து வருகிறது என்பது உண்மை. ஆனால் இந்த நூற்றாண்டில் இந்த நடைமுறையை முழுமையாக அகற்ற முடியுமா என்றால், அதற்கு மிக மிக குறைவான வாய்ப்பே உள்ளது” என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய நிலவரப்படி குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன. யுனிசெஃப் அதை வரவேற்கிறது. ஆனால் 2030-ல் அடைய வேண்டிய வளர்ச்சி இலக்கை இன்னும் நாம் நெருங்கக்கூட இல்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், “உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில், குழந்தை திருமணங்களின் சதவீதம் 23-லிருந்து 19 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் இப்போதும் 18 வயதுக்குட்பட்ட, 12 மில்லியனுக்கும் அதிமான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், இந்த உலகில் குழந்தை திருமணங்கள் முற்றிலும் ஒழிய இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்.
தற்போதுள்ள திருமணமான பெண்கள் பட்டியலில், 640 மில்லியன் பெண்கள் தங்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துள்ளனர். இப்போதும் ஐந்தில் ஒரு குழந்தைக்கு, தங்களின் 18 வயதுக்கு முன்பே திருமணமாகிவிடுகிறது.
குழந்தை திருமணத்திற்கு பெரும்பாலும் வறுமை, பெண்களுக்கான வரையறுக்கப்பட்ட சமூக சூழல்கள், பாலின சமத்துவமின்மை, பலவீனமான சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு சமூகத்தால் தரப்படும் புற பிரச்னைகள் ஆதியவைதான் காரணங்களாக உள்ளன. சுகாதார நெருக்கடிகள், நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவையும் அவ்வப்போது குழந்தை திருமணங்களை இன்னும் அதிகரிக்கின்றன. எப்படியெனில் அவை பெண்களின் கல்விக்கு இடையூறாக வந்து, பள்ளி செல்லா நிலைக்கும், அதன்பிறகு குழந்தை திருமண நிலைக்கும் அவர்களை தள்ளுகின்றன. குழந்தை திருமணத்தை குறைப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், “குழந்தை திருமணம் செய்வோருக்கு, இள வயது கர்ப்ப சிக்கல் ஏற்பட்டு, அதுவும் பிரச்னையிலேயே முடிகிறது. பல இளம் தாய்மார்களை, அதாவது குழந்தைக்கு தாயாகும் இன்னொரு குழந்தையை நாம் குழந்தை திருமணத்தால் இழக்கிறோம்” என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
- D. ரோஷினி