காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில், இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதராவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஈரான் ஆதரவுகொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், லெபனானை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான், லெபானானில் கடந்த இரண்டு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து யுனிசெஃப் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவிக்கையில், “வெறும் இரண்டே மாதங்களுக்குள் லெபனானில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர், இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் இந்த வன்முறையில் கொல்லப்படுவது ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும், அப்பாவி மக்களும்தான். கொஞ்சமாவது மனிதநேயம் இருந்திருந்தால் வன்முறைகளை பின்னுக்கு தள்ளி மனிதநேயத்தை முன்னிறுத்தி இருக்கலாம். மனிதம் மறைந்துபோவதும், மறந்துபோவதும்தான் உண்டாகும் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது!