ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் குழந்தைகள் தடுப்பூசிகள் போடாமல் இருப்பதாக ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
2019 முதல் 2021 வரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு அவர்களுக்கான மற்ற தடுப்பூசிகள் போடும் பணிகள் பாதிக்கப்பட்டது சமீபத்தில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி போடப்படாததால், ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகி வருவதாகவும், மொத்தமுள்ள 54 ஆப்பிரிக்க நாடுகளில் 34 நாடுகளில் அம்மை, காலரா, போலியோ உள்ளிட்ட நோய்கள் பாதித்து வருவதாகவும் யுனிசெஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி குழந்தைகளின் விடுபட்ட தடுப்பூசிகளை விரைந்து அவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் 33 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற இலக்கை ஆப்பிரிக்கா நிர்ணயித்திருக்கிறது. இதனால் 2030ஆம் ஆண்டில் உலகளாவிய நோய்த்தடுப்பு இலக்கை எட்டலாம் என தெரிவித்திருக்கிறது.
மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் காட்டு போலியோ வைரஸ் வகை 1 வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, மலாவி, மொசாம்பிக், தான்சானியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் 2022 ஆம் ஆண்டில் 30 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து தற்போது அந்த பகுதிகளில் போலியோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன.