“புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்காவிட்டால் மனித குலம் அழிந்துபோகும் நிலை ஏற்படும்” என்று எகிப்தில் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான 27ஆம் ஆண்டு ஐநா உச்சி மாநாடு எகிப்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உரையாற்றிய ஐநா பொது செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், “புவி வெப்பமயமாதலை தடுக்க உலகநாடுகள் காலநிலை ஒற்றுமை ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில் தாமாகவே கூட்டு தற்கொலை செய்யும் ஒப்பந்தம் உருவாகிவிடும்” என மிகக்கடுமையாக எச்சரித்தார். மேலும் பேசுகையில், “புவி வெப்பமயமாகும் வேகத்தை பார்த்தால் நரகத்தை நோக்கி அதிவிரைவு சாலையில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது” என கூறிய அந்தோணியோ குத்தேரஸ், “நாம் ஒன்றுபட்டால் உயிர் பிழைக்கலாம். இல்லையெனில் எல்லோரும் அழிந்து போகலாம்” என தெரிவித்தார்.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை வளரும் நாடுகளே அதிகம் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை தடுக்க உலகநாடுகள் சேர்ந்து செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமன்றி, ஐரோப்பாவில் அதீத வெயிலால் இந்தாண்டு மட்டும் 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனமும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.