உக்ரைன் போருக்கு எதிரான ஐநா தீர்மானம்: அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திய ரஷ்யா-என்ன காரணம்?

உக்ரைன் போருக்கு எதிரான ஐநா தீர்மானம்: அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திய ரஷ்யா-என்ன காரணம்?
உக்ரைன் போருக்கு எதிரான ஐநா தீர்மானம்: அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திய ரஷ்யா-என்ன காரணம்?
Published on

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை எதிர்த்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் நிறைவேறுவதை ரஷ்யா தனது வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அதை எதிர்த்து ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் வரைவு தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு போலந்து, இத்தாலி, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்திருந்தன. போர் தொடுக்கும் ரஷ்யாவின் செயலை கண்டிப்பதுடன் அந்நாட்டு படைகள் நிபந்தனைகள் ஏதுமின்றி உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக வாக்கெடுப்புக்கு முன் பேசிய இந்திய பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி, பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைக்குதீர்வு காண வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாகவும் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை கவலை தருவதாகவும் கூறினார். இதன் பின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்த போதிலும் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. ரஷ்யாவிற்கு வீட்டோ அதிகாரம் இருந்ததால் அதன் எதிர்ப்பு கருத்தில் கொள்ளப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என தெரிந்தாலும் அந்நாடு உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதை எடுத்துக்காட்டவே தீர்மானத்தை கொண்டு வந்ததாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன.


முன்னதாக இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். உக்ரைன் தரப்பும் இந்தியாவிடம் ஆதரவு கோரியிருந்தது. இந்தியா தீர்மானத்தை எதிர்க்க வேண்டுமென ரஷ்ய தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நடுநிலையை பேணும் வகையில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யாவிற்கு மிக நெருக்கமாக உள்ள சீனாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காதது கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com