மனித உரிமை மீறல் விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்றது. இது உலக அரங்கில் இலங்கைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இலங்கை இறுதிக்கட்டப் போருக்கு பின் அந்நாட்டில் தமிழர் நடத்தப்படும் விதம் உள்ளிட்ட பிரச்னைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.
அதேநேரத்தில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், கியூபா உள்ளிட்ட நாடுகள், இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன.
மனித உரிமை மன்றத்தில் 47 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் பாதிக்கு மேற்பட்ட, அதாவது 24 நாடுகள் ஆதரிக்கும் பட்சத்தில் தீர்மானம் வெற்றிபெறும். அந்த வகையில், இலங்கை அரசுக்கு எதிரான இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று இலங்கை கூறி வந்தது. இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆதரவு கோரியிருந்தார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்த அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா அல்லது எதிர்த்து வாக்களிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் ஜெயந்த் கொலம்பகே, தங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இவரது பேச்சு குறித்து இந்திய தரப்பில் எந்த எதிர்வினையும் வெளியாகவில்லை. அதேவேளையில், இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கம், சர்வதேச அரசியல் சூழல், உள்நாட்டு அரசியல் நிலவரம் என பல அம்சங்களை கருத்தில்கொண்டே இவ்விவகாரத்தில் இந்தியாவின் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இதைப் புறக்கணிக்கும் முடிவை இந்திய தரப்பு எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.