மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மறைவிற்கு ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஸ்டான் சுவாமி.
எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஸ்டான் சுவாமி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மறைவிற்கு ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “ஸ்டான் சுவாமியின் மறைவு வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொரோனாவை கருத்தில் கொண்டு தடுப்பு காவலில் இருப்பவர்களை உடனே விடுவிக்க வேண்டும். கருத்து சுதந்திர உரிமையை பயன்படுத்தியதற்காக யாரையும் தடுப்பு காவலில் வைக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளது.