நேற்று முன்தினம் காஸா நகரத்திற்கு அருகே உள்ள Jabaliya அகதிகள் முகாமை இஸ்ரேல் குறிவைத்து தாக்கியது. அடுக்குமாடி குடியிருப்பாக இருந்த இந்த முகாம் தரைமட்டமாகவும், பெரும் பள்ளமாகவும் இடிபாடுகளுடன் காட்சியளிப்பதே தாக்குதலின் தீவிரத்தை காட்டுகிறது. இங்கு அதிகளவிலான மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். இப்போது வெறும் மண்மேடாக காட்சியளிப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஹமாஸ் ராணுவ தளபதி Ibrahim Biari-ஐ குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இவர் அக்டோபர் 7 நடந்த முதல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்நிலையில் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் இருந்து வெளியேற யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் எகிப்தின் ராஃபா எல்லை வழியே வெளியேற முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். அதன்படி 400-க்கும் அதிகமானோர் ராஃபா எல்லை வழியே வெளியேற அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயம் அடைந்த 80 பேர் முதற்கட்டமாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஃபா எல்லை வழியே வெளியேற எண்ணற்றோர் காத்திருக்கும் நிலையில், காஸாவில் இருந்து வரும் யாரையும் அகதிகளாக ஏற்க எகிப்து மறுப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதல் ஒருபுறம் தீவிரமாக நடப்பதால் தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் செஞ்சிலுவை சங்கத்தினர், ஐநா ஊழியர்களையும், பாலஸ்தீன மக்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் மீண்டும் இணைய, தொலைத்தொடர்பு சேவைகள் தொடங்கின. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தற்போது வரை இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் 8,525 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.