நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தும், பொருளாதார தடைகளை விதித்தபோதிலும் போர் இறுதி முடிவை எட்டவில்லை.
இதனால் உக்ரைனில் உள்ள வெளிநாட்டு மக்கள் அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். உக்ரைனைச் சேர்ந்த மக்கள், அண்டை நாடுகளான போலாந்து, ஸ்லோவேகியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து போலந்துக்கு அகதியாக செல்லும் சிறுவன் ஒருவன் அழுதுக்கொண்டே யாருமில்லாமல் தன்னந்தனியாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. மெடிஸ்கா கிராமத்தில் இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது. எல்லையை கடந்து செல்லும் அந்தச் சிறுவன் அழுதுகொண்டே தனது பொருட்கள் அடங்கிய பையை போலந்திற்குள் இழுத்துச் செல்வதைப் பார்த்து கண்ணீர் விட்டதாக வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மட்டும் தனியாக செல்கிறான். அவனுடைய குடும்பத்தினர் எங்கே என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அந்த சிறுவன் தனியாக தான் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் சிறுவன், தனது குடும்பத்தினர் இன்றி தனியாகத் தான் சென்றதாக கூறுகின்றனர். உக்ரைனில் நடக்கும் போரில் இதுவரை 38 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 71 குழந்தைகள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “நேட்டோவில் உக்ரைனை இணைப்பது குறித்த விவகாரத்தில் எப்போதோ எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. உக்ரைனை சேர்த்துக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை என தெரிந்தப் பிறகு, அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டு விட்டேன். நேட்டோ எங்களை ஏற்கத் தயாராக இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
சர்ச்சைக்குரிய விவகாரங்கள், ரஷ்யாவுடானான மோதல் ஆகியவைக்கு நேட்டோ கூட்டணி பயப்படுகிறது. மண்டியிட்டு யாசகம் பெறும் நாட்டின் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை. ஆனால், நாங்கள் கடைசி வரை போராடப் போகிறோம். எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப் போவதில்லை" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.