உக்ரைனில் நடைபெறும் போர் சூழல் குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி ஆற்றிய உரைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் மூன்று வாரங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவுடன் போரிட தங்களுக்கு உதவுமாறு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் உக்ரன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால், அந்த நாடுகள் எதவும் உக்ரைனுக்கு நேரடியாக இதுவரை உதவவில்லை. எனினும், ஆயுத உதவிகளை மறைமுகமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொலிக் காட்சி முறையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி அதிகாலையை நினைவுக்கூருங்கள். அப்போது அமெரிக்க வானம் முழுவதையும் ஆக்கிரமித்து வந்த விமானங்கள், பியர்ல் ஹார்பர் துறைமுகத்தின் மீது பயங்கர தாக்குதலை நடத்தின. அதுதான், அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் இறங்கச் செய்தது. அன்று நீங்கள் சந்தித்த பேரிடரை தான் உக்ரைன் மக்களாகிய நாங்கள் இன்று சந்தித்து வருகிறோம். ஐரோப்பா கடந்த 80 ஆண்டுகளில் கண்டிராத பயங்கரவாதத்தை உக்ரைன் கண்டுகொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் எங்களுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள் என அவர் பேசினார்.
செலன்ஸ்கியின் பேச்சால் உணர்ச்சிவயப்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள், எழுந்து நின்று அவரது துயரத்தில் கலந்து கொண்டனர்.