உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு
உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு
Published on

உக்ரைனின் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் ரஷ்யா இன்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதேபோல, உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதலில் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் ரஷ்ய படையினர் ஏராளமானோரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது ரஷ்யா வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய ராணுவம் இன்று பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல இந்த ரயில் நிலையத்தை உக்ரைன் பயன்படுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com