மாமியார் இம்சை, போதை கணவரின் டார்ச்சர், வரதட்சணை கொடுமை காரணமாகத்தான் பெரும்பாலும் விவகாரத்து கேட்பது வழக்கம். ஆனால், கணவரின் அதீத அன்பை தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் விவாகரத்து வழக்குத்
தொடர்ந்திருக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சார்ஜா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கில், விவாகரத்துக்கான காரணம் என்று அவர் கூறியிருப்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் அவர் கூறும்போது, ‘’எங்களுக்கு திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகிறது. கணவர் என்னிடம் ஒருபோதும் சத்தம் போட்டதில்லை. என்னை நிராகரித்ததில்லை. அதிகமாக என்னை காதலிக்கிறார். அவரது மூச்சுத்திணற வைக்கும் அன்பால் திக்குமுக்காடி போனேன். வீட்டை சுத்தம் செய்வதற்கு எனக்காக உதவினார். சில நேரங்களில், சமையல் கூட அவரே செய்துவிடுவார். இந்த ஒருவருட திருமண வாழ்க்கையில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை.
ஆனால், நான் தகராறுக்காக ஏங்குகிறேன். இது என் ரொமான்டிக்கான கணவரிடம் கிடைக்காது என நினைக்கிறேன். அவர் எப்போதும் என்னை மன்னித்துக்கொண்டே இருக்கிறார். பரிசுகளைக் கொட்டுகிறார். ஆனால் எனக்கு உண்மையான விவாதம் வேண்டும். வாக்குவாதம் தேவை. தொந்தரவில்லாத இந்த வாழ்க்கை எனக்கு நரகமாக இருக்கிறது. அதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.
‘நான் நல்ல கணவனாகத்தான் இருந்திருக்கிறேன். வேறு எந்த தொந்தரவும் செய்யவில்லை. என் மனைவிக்கு அறிவுரை சொல்லி, வழக்கை வாபஸ் வாங்க சொல்லுங்கள்’ என்கிறார் கணவர். இதையடுத்து இந்த வழக்கைத் தள்ளி வைத்துள்ள நீதிமன்றம், இருவருக்கும் இன்னும் சில காலம் அவகாசம் கொடுத்துள்ளது.
இந்த வழக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.