சில தீவிரவாத குழுக்கள் சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை உருவாக்கி, ஆன்லைன் மூலம் தீவிரவாதப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்கு முகக்கவச விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்வாப் அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "உலகமே கொரோனா பரவலில் இருந்து மெல்ல மீண்டுவரும் நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, முகக்கவசங்களை விற்பனை செய்து ஆன்லைன் மூலம் தீவிரவாதச் செயல்களுக்கு நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த நெறியும் மத விழுமியங்களும் இல்லை " என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அதுபோன்ற போலி கணக்குளின் இணைப்புகளை க்ளிக் செய்யவேண்டாம் என ஸ்வாப் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளதுடன், "இந்த அபாயகரமான பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி மக்களைக் கொல்வதற்காக மூளைச் சலவை செய்து ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தீவிரவாதிகளின் ஆன்லைன் வலையில் சிக்காமல் பிள்ளைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் ஸ்வாப் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.